Tuesday, 30 July 2013

பழைய தங்கத்தை விற்றால் நஷ்டமே! ................உஷார் கணக்கீடு...

மூன்று ஆண்டுகளுக்கு தங்கம் வாங்காதீர்கள் என மத்திய நிதி அமைச்சர் வேண்டுகோள் விடுப்பது ஒருபக்கமிருக்க, உங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை தந்து சுத்தமான தங்கமாக மாற்றிக்கொள்ளுங்கள் என விளம்பரம் செய்யத் தொடங்கி இருக்கின்றன நகைக் கடைகள். இதற்கு போனஸும் கிடைக்கும் என்பது எக்ஸ்ட்ரா கவர்ச்சி. நகைக் கடைகள் பழைய தங்கத்தை வாங்குவதற்கு என்ன காரணம்? ஏன் போனஸ் தருகிறது? இதனால் மக்களுக்கு லாபமா, நஷ்டமா? என பல கேள்விகளை ஜெம் அண்ட் ஜுவல்லரி டெக்னாலஜி டிரெய்னிங் சென்டரின் இயக்குநர் சுவாமிநாதனிடம் கேட்டோம்.  
''நாம் அளவுக்கதிகமாக தங்கம் இறக்குமதி செய்ததால், நம் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணி பெரிய அளவில் குறைந்தது. இதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் ஏகத்துக்கு உயர்ந்த
து. இதைத் தடுக்கும்விதமாக தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அதிக கட்டுப்பாடுகளை விதித்தது. 2 சதவிகிதமாக இருந்த இறக்குமதி வரியானது, கடந்த 18 மாதங்களில் 8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யும் தங்கத்திற்கான மார்ஜின் தொகை முழுவதையும் செலுத்தினால்தான் தங்கத்தை வாங்கமுடியும் என வங்கிகளும் கட்டுப்பாடு விதித்தன. முழுத் தொகையும் செலுத்த அதிகமான பணம் தேவை. இதனால் நகைக் கடைகள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளன. இதன் விளைவாக நகைக் கடைகள் தங்கம் இறக்குமதி செய்யும் அளவை வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளன.
கடந்த மே மாதத்தில் 162 டன் இருந்த தங்கத்தின் இறக்குமதி ஜூன் மாதத்தில் 38 டன்னாக- குறைந்தது. தங்கத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நகைக் கடைகள் தேவையான தங்கத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கத் திட்டமிட்டன. இதற்கு காரணம், இந்திய வீடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக வேர்ல்டு கோல்டு கவுன்சில் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்தத் தங்கத்தில் 10 சதவிகித தங்கத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கினால்கூட போதும் என நகைக் கடைகள் நினைக்கின்றன.
இதனால் பழைய தங்கத்தை சுத்தமான 916 தங்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். அதோடு பழைய தங்கத்திற்கு போனஸும் தருகிறோம் என்று விளம்பரம் செய்கின்றன. இப்படி போனஸ் தருவதால் வாடிக்கையாளர்களுக்கு லாபம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை.
பழைய தங்கத்தை விற்கும்போது நகைக் கடைகள் குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கழித்துவிடுகின்றன. இதனால் பழைய தங்கத்தை அன்றைய விலையில் எடுத்துக்கொண்டால்கூட உங்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பில் ஒரு சில சதவிகிதத்தைக் குறைத்துதான் மதிப்பீடு செய்வார்கள். இப்படி கழிக்கப்படும் தங்கத்தின் மதிப்பு என்பது உங்களுக்கு கொடுக்கும் போனஸ் தொகை மதிப்பைவிட அதிகமாக இருக்கும். நகைக் கடைகள் அதிகபட்சம் ஒரு கிராமிற்கு 100 ரூபாய் போனஸ் தரும். ஆனால், ஒரு கிராமிற்கு 250 ரூபாய் வரை  நகைக் கடைகள் லாபம் பார்க்க முடியும். நகைக் கடைகள் இப்படி செய்வதன் மூலம்  கடைகளில் இருக்கும் நகைகளும் குறையும். இதனால் வியாபாரமும் நடக்கும்.
மேலும், தங்க இறக்குமதியைக் குறைக்க தங்க காயின்கள், பார்கள் விற்கக் கூடாது என அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனாலும் நகைக் கடைகளுக்குதான் லாபம். ஏனெனில் காயின், பார்கள் விற்கும்போது குறைந்த அளவில்தான் சேதாரம் வசூலிக்க முடியும். இப்போது தங்கம் வாங்க நினைப்பவர்கள் ஆபரணமாகவே வாங்கும் கட்டாயத்தில் இருப்பதால் நகைக் கடைகளுக்கு லாபம்தான்.
சில நகைக் கடைகள் கள்ளச் சந்தையில் தங்கத்தை வாங்கு கின்றன. இப்படி வாங்கும் தங்கம் கணக்கில் வராது என்பதால் வரி எதுவும் கட்டுவதில்லை. இதனை கணக்கில்கொண்டு வருவதற்கும் பழைய தங்கத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கத் திட்டமிடுகிறார்கள்.
இப்போதுள்ள சூழ்நிலையில், உங்களுக்கு தேவை இருந்தால் மட்டுமே பழைய தங்கத்தை விற்று புதிய தங்க நகைகளாக மாற்றிக்கொள்ளுங்கள். கல் வைத்த நகைகளை மாற்றும்போது வாடிக்கையாளர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படவே செய்யும். முடிந்தவரை ஏற்கெனவே நகை வாங்கிய கடைகளிலே திரும்பத் தந்து, புதிய தங்கமாக மாற்ற முயற்சி செய்யுங்கள்'' என்றார்.
அவசரப்பட்டால் நஷ்டமே என்பதைப் புரிந்துகொண்டால் எப்போதும் நல்லது.

Friday, 26 July 2013

உயிரோட்டம் உள்ளதா வாழ்க்கையில் ?

எல்லோருமே வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தேடுகிறோம், ஒரு அர்த்தத்தைத் தேடுகிறோம், வெற்றியடைய ஆசைப்படுகிறோம். மகிழ்ச்சியும், அர்த்தமும், வெற்றியும் எது எது என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும் விஷயங்கள் என்றாலும் எல்லோருடைய தேடலும் அவற்றை நோக்கியே இருக்கின்றன. என்றேனும் ஒரு நாளில் வெற்றியடைவோம், வாழ்வில் அர்த்தம் கண்டு பிடிப்போம், மகிழ்ச்சியடைவோம் என்ற எதிர்பார்ப்பில் தினசரி வாழ்க்கையைக் கோட்டை விடும் முட்டாள்தனம் பலரிடம் இருக்கிறது.

பலருடைய தினசரி வாழ்க்கை எந்திரத்தனமாக இருந்து விடுகிறது. என்றோ வாழப்போகும் நல்லதொரு வாழ்க்கைக்கான ஓட்டப்பந்தயமாக இருந்து விடுகிறது. வாழ்கின்ற வாழ்க்கை சரிதானா என்ற சந்தேகம் அடிக்கடி வர அடுத்தவர்களைப் பார்த்து அவ்வப்போது மாற்றிக் கொள்கிறதாகி விடுகிறது. இயற்கையான ஆரம்ப இலக்குகள் மாறி பணம், புகழ், படாடோபம் என்ற இலக்குகள் பெரும்பாலானவர்களின் இலக்குகளாகி விடுகின்றன. இந்த இலக்குகளில் மகிழ்ச்சியும், அர்த்தமும், வெற்றியும் தேடும் போது பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

உண்மையான மகிழ்ச்சி, அர்த்தம், வெற்றி இருக்கிறதா என்பதை அறிய ஒரு மனிதனின் தினசரி வாழ்க்கையைப் பார்ப்பது மிகச்சரியாக இருக்கும்.  காலத்தை மறந்து, செய்கின்ற வேலையில் ஐக்கியமாவது உண்டா? பெரிய செலவில்லாமல் ரசிக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் உண்டா? அடுத்தவர் பார்வைக்கு எப்படி இருக்கிறது என்று கவலைப்படாமல் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காகவே ஈடுபடும் விஷயங்கள் உண்டா? பெரும்பாலான நாட்களில் உற்சாகமாக எதிர்பார்க்கவும், செய்யவும் ஏதாவது புதுப்புது முயற்சிகள் உண்டா? இதில் ஓரிரண்டு கேள்விகளுக்காவது பதில் ஆம் என்று இருந்தால் உங்கள் வாழ்க்கை உயிரோட்டம் உள்ள வாழ்க்கை. உங்கள் வாழ்க்கை அர்த்தத்தோடும், மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் போய்க் கொண்டிருக்கிறது என்று பொருள்.

அதற்கு எதிர்மாறாக உங்கள் தினசரி வாழ்க்கை இருந்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் உண்மையான உயிரோட்டம் இல்லை என்று பொருள். கேளிக்கைகளில் ஈடுபட்டால் தான் மகிழ்ச்சி கிடைக்கிறதா? தினசரி குடித்தால் தான் நிம்மதி கிடைக்கிறதா? அடுத்தவர்களைப் பற்றி வம்பு பேசி தான் பொழுது போகிறதா? அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்த்து மிஞ்ச முனைவதில் தான் தினமும் அதிக நாட்டம் செல்கிறதா? பொருளாதார இலாபம் இல்லா விட்டால் உங்களுக்கு மிக ஆர்வமுள்ளவற்றில் கூட கவனம் செலுத்த மறுக்கிறீர்களா? இதில் சிலவற்றிற்கு பதில் “ஆம்” என்றால் உங்கள் வாழ்க்கையில் ஓட்டம் இருக்கலாம், ஆனால் உயிர் இல்லை என்று பொருள்.

உயிரோட்டமுள்ள வாழ்க்கைக்கு சில உதாரணங்கள் பார்ப்போம். எடிசன், ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளில் மூழ்கி விடும் போது உலகத்தையே மறந்து விடுவார்களாம். கொண்டு வந்து வைக்கப்படும் உணவை உண்ணக் கூட மறந்து விடுவது சகஜமாம். லியார்னாடோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ போன்ற ஓவிய மேதைகளும் அப்படியே தங்கள் படைப்பில் மூழ்கி விடுவார்களாம். அப்படியே தான் எல்லாத் துறை மேதைகளையும் சொல்லலாம். அந்த நேரங்களில் செய்யும் வேலையின் சிரமங்களோ, வரப் போகும் லாபங்களோ, கிடைக்கப் போகும் புகழோ அவர்கள் கவனத்தில் இல்லை. அந்தத் தருணங்கள் மிக அழகானவை. உயிரோட்டமுள்ளவை. செய்யும் செயல் முழுமை பெறப் பெற அவர்கள் அடையும் சந்தோஷம் வார்த்தைகளில் அடங்காதது. அதே நேரத்தில் அது அர்த்தமுள்ளதாகவும் அமைந்து வெற்றியையும் அளித்து விடுகிறது. அந்த அளவு தனித்திறமை இல்லா விட்டாலும் எத்தனையோ பேர் தங்கள் இயல்புக்கு ஏற்ப உயிரோட்டமான உபயோகமான வாழ்க்கை வாழ்வதை நாம் பல இடங்களிலும் பார்க்கலாம்.

மனதுக்குப் பிடித்ததே வேலையாகவோ, தொழிலாகவோ அமையும் பாக்கியம் ஒருசிலருக்கே வாய்க்கிறது. பலருக்கு அப்படி அமைவதில்லை. அமைகின்ற வேலை உற்சாகமாக இல்லாத போது பொழுது போக்கு ஒன்றையாவது உற்சாகமாகவோ, உபயோகமாகவோ வைத்துக் கொள்வது மிக புத்திசாலித்தனமான அணுகுமுறை. வருமானத்திற்கு ஒரு தொழிலும், மனதிற்கு பிடித்ததாய் ஒரு நல்ல பொழுது போக்கும் அமைத்துக் கொண்டு உயிரோட்டம் உள்ள வாழ்க்கை வாழ்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சிறிய அரசாங்க வேலையில் இருக்கிறார். அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை உடையவர். அவர் இது வரை ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டுள்ளார். அப்படி நடும் போதும் அதைப் பற்றி பேசும் போதும் அவர் முகத்தில் பொங்கும் பெருமிதம் பார்க்கவே அலாதியாக இருக்கும். இப்படி சிலர் சமூக சேவை எதிலாவது முழு மனதுடன் ஈடுபட்டு உயிரோட்டமாய் வாழ்க்கையை வைத்துக் கொள்கிறார்கள்.

வேலைக்குப் போகாத ஒரு குடும்பத் தலைவி தோட்ட வேலைகளில் மிகவும் ஈடுபாடுடையவர். நடும் செடிகளில் தளிர்க்கும் ஒவ்வொரு இலையிலும், பூக்கும் ஒவ்வொரு பூவிலும் ஆனந்தம் காணும் தன்மை அவரிடம் உண்டு.  இன்னொரு மனிதர் புத்தகப்பிரியர். புத்தகம் ஒன்று கிடைத்து விட்டால் உலகையே மறந்து அதில் ஆழ்ந்து விடுவார். அவருடைய வேலை எந்திரத்தனமாக அமைந்திருந்தாலும் பிடித்த புத்தகங்கள் படித்து வாழ்க்கையில் உற்சாகம் குன்றாமல் அவர் பார்த்துக் கொள்கிறார். இப்படி பலர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிடித்த ஒன்றில் ஆர்வமாக ஈடுபட்டு வாழ்க்கை எந்திரத்தனமாக மாறி விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சாதனை புரியவோ, சரித்திரம் படைக்கவோ முடியா விட்டாலும் வாழ்க்கை உயிரோட்டமாக இருக்கும்படி இப்படிப் பட்டவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

இப்படி உயிரோட்டமான வாழ்க்கை வாழ்பவர்கள் பெரும்பாலும் உபயோகமான வாழ்க்கை வாழ்கிறார்கள். இல்லா விட்டாலும் கூட மற்றவர்களுக்கு உபத்திரவமாக என்றும் மாறுவதில்லை. தங்கள் வாழ்க்கையில் தங்கள் வழியில் நிறைவு காண்பவர்கள் அடுத்தவர்கள் வாழ்க்கையில் அனாவசியமாகக் குறுக்கிடுவதில்லை. அடுத்தவர்களை நோகடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகளையும், துக்கங்களையும் சமாளித்து சீக்கிரமே மீண்டும் விடுகிறார்கள்.

அப்படி உயிரோட்டமில்லாத வாழ்க்கை வாழ்பவர்களோ அதிகமாக அடுத்தவர்களைப் பார்த்தே வாழ்கிறார்கள். பொருளாதார நிலையே மிக முக்கியம் என்று நம்பி சம்பாதிக்கும் முனைப்பில் தனிப்பட்ட இயல்பான திறமைகளையும், ஆர்வங்களையும் பலி கொடுத்து விடுகிறார்கள். பணம், பொருள், சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டே போகும் அவர்கள் வாழ்வில் முன்பு சொன்னது போல ஓட்டம் இருக்கிறது. உயிர் இருப்பதில்லை. ஒரு வெறுமை என்றும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வெறுமையை நிரப்ப சிலர் போதையை நாடுகிறார்கள், சிலர் கேளிக்கைகளில் அதிகம் ஈடுபடுகிறார்கள், சிலர் பதவி அதிகாரம் தேடி அடைகிறார்கள். வெளிப்பார்வைக்கு அந்த வாழ்க்கை வெற்றியாகவும், மகிழ்ச்சியாகவும்  தோன்றினாலும், நிரப்ப முடியாத வெறுமையாகவே அப்படிப்பட்ட வாழ்க்கை இருந்து விடுவது தான் சோகம்.

எனவே உங்கள் வாழ்க்கையில் உயிரோட்டம் உள்ளதா என்பதை சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். மாற்றம் தேவையானால் மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்தவர் பார்வைக்கு வெற்றிகரமான வாழ்க்கையாய் தெரிந்து உள்ளுக்குள் வெறுமையை உணரும் வாழ்க்கையாக இருக்கும் அவலம் மட்டும் வேண்டவே வேண்டாம்.

Tuesday, 23 July 2013

முயற்சி என்பது தொடர்கதை தோல்வி என்பது சிறுகதை

வேகவேகமாய் மலைமுகடுகளில் ஏறிக்கொண்டிருந்தனர் அந்த இளைஞர்கள். அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில் வசிக்கும் அவர்கள் முகத்தில் கோபமும் வன்மமும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அதைவிட அதிகமாய் ஆயாசமும் சோர்வும். தங்கள் 

கிராமத்திலிருந்த நான்கு வயதுக் குழந்தை ஒன்றினை மலை மேலுள்ள கிராமத்தினர் கடத்தி விட்டதால் இவர்கள் மீட்கப் புறப்பட்டிருந்தார்கள். 

மலையேறுவது இவ்வளவு கடினமான விஷயம் என்று அவர்கள் கருதியிருக்கவில்லை. மூச்சு வாங்க வாங்க மலையின் மேல் ஏறிக் கொண்டிருந்த போது தூரத் தொலைவில் ஒரு பெண்ணுருவம் தெரிந்தது. இன்னும் நெருங்க நெருங்க அந்தப் பெண்ணின் கைகளில் ஒரு குழந்தை இருப்பதும் புரிந்தது. நன்றாகப் பார்த்தால், காணாமல் போன குழந்தை அது! மீட்டு வருவதோ அந்தக் குழந்தையின் தாய்! 

வியப்புடன் அந்தப் பெண்ணைச் சூழ்ந்து கொண்டனர் இளைஞர்கள். ஒருவர் கேட்டார் “ஏறவே சிரமமான இந்த மலையில் நாங்களே தடுமாறுகிறோம். நீ எப்போது, எப்படி ஏறினாய்?” குழந்தையின் அன்னை கூறினாள், “அண்ணா, காணாமல் போனது என் குழந்தை” – பொட்டில் அறைந்தது போலிருந்தது அந்த இளைஞர்களுக்கு. 

இன்னொருவர் குழந்தையைக் காப்பாற்றப் போனதால் அந்த இளைஞர்களுக்கு தூரம் தெரிந்தது. வலியும் தெரிந்தது, தன்னுடைய குழந்தையை மீட்கப் போனதால் அந்த பலவீனமான பெண்ணுக்கு மலை – மலையாகவே தெரியவில்லை. 

மலைபோல் பெரியது எதை நாம் எதிர்கொண்டாலும், அதைத் தீர்ப்பதில் நமக்கு எவ்வளவு வேகமும் விருப்பமும் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதை வெற்றி காண முடியும். 

பெரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கைதேர்ந்தவர்கள் என்று சிலர் இருப்பார்கள். அவர்கள், ஆயிரம் பிரச்சினைகளை அநாயசமாக கையாள்வது எப்படித் தெரியுமா? ஒவ்வொரு பிரச்சினையையும் புதிதாகப் பார்ப்பதன் மூலம்தான். “இதென்ன பெரிய விஷயம்” என்று அலட்சியமும் அலட்டலுமாய் எதிர்கொண்டால் எதிர்பாராத நேரத்தில் அந்த அலட்சியமே நம்மை சறுக்கி விழச் செய்யும். 

இது புதிய பிரச்சினை என்ற விழிப்புணர்வுடன் அதனை அலசி ஆராய்ந்தால், புதிய வழிமுறைகள் கிடைக்கும். புதிய தீர்வுகளும் பிறக்கும். இதுகூட ஒரு மலையேற்றம் மாதிரிதான். மலையில் ஏறுகிறபோது, நீங்கள் கடந்து வந்த தூரத்தைப் போலவே கடக்கப் போகிற தூரமும் முக்கியம். எத்தனை தூரம் கடந்து வந்திருந்தாலும், எடுத்து வைக்கப் போகிற அடிகள்தான் இலக்கைக் கடக்க உதவப் போகின்றன. ஐம்பது மைல் தூரமுள்ள மலையைத் தாண்டுகிறீர்கள் என்றால், இருபது மைல் தூரத்தை இரண்டு மணி நேரத்தில் ஏறிவிட்டீர்கள் என்பது மட்டும் சாதனையாகாது. மீதமுள்ள முப்பது மைல் தூரத்தைத் தாண்டும் சக்தி இருக்கிறதா என்பதே உங்கள் சாதனையின் அளவுகோல் ஆகும். 

மலர்ச்சியுடன் தொடங்குவது, மனவலிமை குன்றுவது, பாதியில் திணறுவது என்று பலவீனமான உள்ளம் இருந்தால் சின்னப் பயணம்கூட சிரமமாகத்தான் இருக்கும். 

புகழ்வாய்ந்த மலையேற்ற நிபுணர் ரெய்ன்ஹோல்ட் டெஸ்னர் இருபது வயதிலிருந்து சிகரங்களைத் தொடுவதில் சிறுத்தை வேகம் காட்டுபவர். ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியில்லாமல் பல்லாயிரம் அடிகளைப் பாய்ந்து கடப்பதில் புகழ்பெற்றவர் இவர் – “மலைகளின் முகடுகளைக் கடப்பதுபற்றி நான் மூளையால் சிந்திக்கவில்லை – கால்களால் சிந்தித்தேன்” என்றார் இவர். 

கால்களால் சிந்திப்பது என்றால், உடனே காரியத்தில் இறங்குவது என்று பொருள். ஒரு காரியத்தை நடைமுறைப்படுத்த உடனடியாய் முடிவெடுக்கும்போது மகத்தான சக்தி நம்மில் நிறைகிறது. 

பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நேரடியாய் ஈடுபடுவதில் சாதகங்களும் உண்டு. பாதகங்களும் உண்டு. பாதகங்களை நினைத்து பயப்படுபவர்கள், உண்மையில் பிரச்சினையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை. நம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று தயக்கம் காட்டுபவர்கள். அதன் காரணமாகவே தீர்வு நோக்கி நகராமல், பிரச்சினையை உள்ளுக்குள்ளேயே ஊறப்போட்டு, ஆனவரைக்கும் ஆறப்போட்டு, நெருக்கடி முற்றிய பின்னால் நிமிர்ந்து பார்ப்பார்கள். 

மாறாக, பிரச்சினையைத் தீர்ப்பதே முக்கியம் என்று முதலடி எடுத்து வைத்துவிட்டால் மலையைப் பார்த்து மலைத்து நிற்க வேண்டியிராது. 

பல தொழிலதிபர்கள் இப்படி கணப்பொழுதும் தாமதிக்காமல் களத்தில் இறங்கி, தங்களுக்குத் தடையாய் இருந்த மலைகளை விழுங்கியதால் ‘மலைவிழுங்கி மகாதேவர்களாக’ விளங்குகிறார்கள். 

அவர்களைக் கேட்டால், “நேரடியாய்க் களத்தில் இறங்குவதால் நம்முடைய பலம் நமக்கே முதலில் தெரிகிறது” என்கிறார்கள். உண்மைதான் ஒரு சிக்கலைத் தீர்க்கிறபோது, அதன் உச்சம் தொடுகிற சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் உருவாகும். மலையுச்சியை நெருங்குகிறபோது, பிராணவாயு போதாத போது பனிமழையின் குளிர் தாங்காத போது, மலையேறும் வீரர்கள் தங்கள் யுத்தத்தின் நடுக்கமான கணங்களில் நிற்பார்கள். ஓடமுடியாதவர்கள் நடந்தாவது இலக்கினைத் தொடுவார்கள். நடக்க முடியாதவர்கள் தவழ்ந்தாவது இலக்கினைத் தொடுவார்கள். அப்போதும் அவர்கள் “கால்களால்தான்” சிந்திப்பார்கள். 

போராட்டத்தின் உச்சிப் பொழுதில், நம் மனோசக்தியை நாமே மறுபரிசீலனை செய்வதெல்லாம் முடியாத காரியம். எப்படியாயினும் இலக்கைத் தொடுவது என்கிற ஒற்றைச் சிந்தனைநோக்கி உடல் – உள்ளம் – உயிர் எல்லாம் குவிகிறபோது அந்த முயற்சி வெற்றியடைகிறது. 

கடைசி நேரப் பின் வாங்குதல் நம்மை பிரச்சினையிலும் நிறுத்தாமல், தீர்விலும் பொருத்தாமல் நடுவே நிறுத்திவிடுகிறது. அது திரிசங்கு சொர்க்கமல்ல. திரிசங்கு நரகம். செய்துமுடி அல்லது செத்துமடி என்ற தீவிரத்துடன் மோதுபவர்கள், செய்து முடித்திருக்கிறார்கள். 

வெளியே இருக்கும் மலைபோன்ற பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல, மனிதனின் மனதுக்குள் நடக்கிற போராட்டங்களுக்கும் இது பொருந்தும். உணர்ச்சிக்கும் அறிவுக்கும் நடக்கிற போராட்டம் – சபலத்துக்கும் சங்கல்பத்துக்கும் நடக்கிற போராட்டம் என்று, எல்லாவற்றையும் இதே தீவிரத்துடன்தான் மேற்கொள்ள வேண்டும். 

தன்னோடு நடந்த போராட்டத்தில் தன்னையே பணயம் வைத்தவர்களின் பயணங்கள், வெற்றிப்பயணங்கள் ஆகியிருக்கின்றன. 

“மோகத்தைக் கொன்றுவிடு – அல்லால் – எந்தன் மூச்சை நிறுத்திவிடு 

தேகத்தைச் சாய்த்துவிடு – அல்லால் – அதில் சிந்தனை மாய்த்துவிடு” என்று மகாகவி பாரதி முன்மொழிவதும் இதைத்தான். 

சாதக பாதகங்கள் என்று யோசித்து சிலர் தயங்கி நிற்கிறார்கள் என்பதாகப் பார்த்தோம். இதில் இருக்கிற ஒரே பாதகம், தோல்வி பற்றிய பயம்தான். உண்மையில் முயற்சி என்பது தொடர்கதையானால் தோல்வி என்பது சிறுகதைதான். 

தவறுகளைத் திருத்திக் கொண்டு மீண்டும் சிலர் முயன்றிருக்கிறார்கள். பலரோ தோல்வி தந்த அதிர்ச்சியிலும் அவமானத்திலும் துவண்டு போய் விழுந்திருக்கிறார்கள். தோல்வியால் விழுந்தவர்கள் எவருமில்லை. தோல்வி தந்த அவமானத்தால் தங்கள் மீது தாங்களே அவநம்பிக்கையடைந்து, அதனால் விழுந்தவர்கள்தான் அதிகம். 

இரண்டில் ஒன்று பார்ப்பவர்கள் சாமர்த்தியசாலிகள். இரண்டையுமே பார்த்துத் தயங்குபவர்கள் குழப்பவாதிகள். நீங்கள் ….. சாமர்த்தியசாலியா? குழப்பவாதியா?