Wednesday, 30 April 2014

மன்னார்குடிக்கு ரயில் வந்த மர்மம் !!!!

இது ஓர் அதிசயக் காடு...
எதையும் எதுவும் கொல்லக் கூடாதென்பது கட்டுப்பாடு...
இங்கேயும் ஒரு தேர்தல்...
மான், முயல், மயில் கூட்டமெல்லாம் வாக்காளர்கள்...
சிங்கம், புலி, கரடி, நரி, குரங்கு எல்லாம் வேட்பாளர்கள்...
வாக்குறுதிகள் வாரி வழங்கப்பட்டன.
'நான் வெற்றிபெற்றால், குளிர்காலங்களில் உங்களுக்கு போர்வை போல் கதகதப்பாக இருப்பேன்’ என்றது கரடி.  
'கோழைகளான உங்களுக்கு சகலவிதமான சண்டைகளும் கற்றுக் கொடுப்பேன்’ என்றது சிங்கம்.
'இதுவரை நீங்கள் சுவைத்திடாத, எட்டாத உயரத்தில் உள்ள பழங்களை எல்லாம் பறித்துக் கொடுப்பேன்’ என்றது குரங்கு.
இப்படியாக, இன்னும் பல...
இதற்கெல்லாம் மான், மயில், முயல் கூட்டங்கள் மயங்கவில்லை.
ஆனால், நரியின் வாக்குறுதிகள் வசியப்படுத்தின...
'காட்டின் எல்லை வரை எளிதாகச் சென்று வர, அடையாளப் பாதை அமைத்துத் தருவேன். நம் எல்லைக்குள் இருந்தே வெளியுலகத்தை ரசிக்கலாம்’ என்றது நரி.
நரிக்குக் கிடைத்தது, மகத்தான வெற்றி.
அமைக்கப்பட்டது, அடையாளப் பாதை.
வரத் தொடங்கினார்கள், வேடர்கள்.
சுட்டுக் கொல்லப்பட்டன, அப்பாவி ஜீவன்கள்.
இதில், நரிக்குக் கொடுக்கப்பட்டது, பாதி பங்கு..!


ஏதோ ஓர் உள்நோக்கத்தோடுதான் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து அவசர அவசரமாக அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு... புத்தம் புதிதாக ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றனவோ? என்று அதிர்ச்சி கலந்த குழப்பத்தில் உறைந்திருக்கிறார்கள், டெல்டா பகுதி மக்கள்.
''முப்பது-நாற்பது வருசமா மன்னார்குடியில ரயில் வசதியே இல்லாம இருந்துச்சு. ஆனா, இப்ப ஒரு சில வருஷத்துக்குள்ள வேக வேகமா அகல ரயில் பாதை அமைச்சு, மன்னார்குடி-சென்னை, மன்னார்குடி- திருப்பதி, மன்னார்குடி-ஜோத்பூர், மன்னார்குடி-மானாமதுரை, மன்னார்குடி-கோயம்புத்தூர், மன்னார்குடி- மயிலாடுதுறைனு ரயில்களை விட்டுக்கிட்டே இருக்காங்க.
'இந்தியாவுல இருக்கற எல்லா மாநிலங்களுக்கும் ரயில் விடப்போறோம்’னு வேற ரயில்வே அதிகாரிகள் சொல்லிட்டிருக் காங்க. இந்த ரயில் வந்ததால... எங்களுக்கு வசதிங்கிறது உண்மைதான். ஆனா, 'ஒரு மூலையில இருக்கற மன்னார்குடி மேல எதுக்காக இத்தனை அக்கறை’னு பரவலா ஒரு கேள்வி இருந்துச்சு. கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா, குறிப்பா, மீத்தேன் திட்டம் வேகம் எடுத்ததுக்கப்பறம்தான் ரயில் விட்டிருக்காங்க. முதல்கட்டமா, மன்னார்குடியை சுத்தியுள்ள கிராமங்கள்லதான் மீத்தேன் எடுக்கப் போறாங்க. அதனால, அதிகாரிகள், தொழி லாளர்கள், பன்னாட்டு நிறுவனங்களோட முதலாளிகள்னு எல்லாரும் அடிக்கடி இங்க வரவேண்டியிருக்குமாம். அதுக்காகத்தான் இப்போ பயணிகள் ரயில் விட்டுருக்காங்க. அடுத்து சரக்கு ரயில்களையும் விடுவாங்க.
மீத்தேன் எடுக்குற பணிகளுக்குத் தேவையான இயந்திரங்கள், ரசாயனங்கள் கொண்டு வர்றதுக்கும்... மீத்தேன் எடுக்கும் போது, கிடைக்கக்கூடிய நிலக்கரி மாதிரியான இன்னும் பல பொருட்களைக் கொண்டு போறதுக்கும் சரக்கு ரயில்களைப் பயன்படுத்துவாங்க. ஆகக்கூடி, இந்த ரயிலெல்லாம்... எங்களுக்காக இல்லைங்கிறது இப்பத்தான் தெரியுது'' என்று என்னிடம் தன் கவலையைப் பதிவு செய்தார், வருவாய்த்துறையில் பணியாற்றும் மன்னார்குடிக்காரர் ஒருவர்.

''முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுதான் மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தாரு. அவரோட அதிகாரப்பூர்வமான இணையதளத்துலயே இந்தத் தகவல் வெளியானது. மன்னார்குடியில அகல ரயில்பாதை அமைச்சி, ஏராளமான ரயில்களைக் கொண்டு வந்தவரும் இதே டி.ஆர். பாலுதான். அதனாலதான், இதுல ஏதோ சூட்சமம் இருக்குனு சந்தேகப்படுறோம்''
-இது, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வரதராஜன்.
ஒரு பக்கம் மன்னார்குடியிலிருந்து ரயில்கள் வேகமெடுத்துக் கொண்டே இருக்க... மறுபக்கம், 'மீத்தேன் எடுக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அடுக்கடுக்கான ஆபத்துகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிற அச்சம்' டெல்டா மாவட்ட மக்களிடம் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது.
திருவாரூர் அருகே உள்ள வெள்ளக்குடி மற்றும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கேஸ் எடுப்பதால், அங்குள்ள மக்கள் சந்திக்கும் அவலங்கள், இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. உச்சிமேடு கிராமத்தில் பெட்ரோல்-கேஸ் குழாய் வெடித்ததால் ஆனந்தராஜ் என்ற சிறுவன் உயிர் இழந்ததையும், சேதுபதி என்ற மாணவன் நடைபிணமாய் மாறியதையும் கனத்த இதயத்தோடு கடந்த இதழில் பகிர்ந்து கொண்டேன். இதேபோன்றதொரு துயரம்... தண்டலை கிராமத்திலும் அரங்கேறியிருக்கிறது.
''இங்க, ரோட்டு மேலேயே பெட்ரோல்-கேஸ் குழாய் போனதால, அதுல லாரி மோதி, கச்சா எண்ணெயோடு கேஸ¨ம் சேர்ந்து வெளியாகி, வெடிச்சிடுச்சி. லாரி முழுக்க நெருப்பு புடிச்சி, ஒரு உயிர் பறிபோயிடுச்சு'' என வேதனையோடு சொல்கிறார்... இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கலைச்செல்வன்.
கச்சா எண்ணெய் கசிவுகளால், இங்குள்ள ஏராளமான விளைநிலங்கள் மலடாகிக் கிடக்கின்றன. நிலத்து மண்ணோடு கச்சா எண்ணெய் கலந்து போனதால்... நிலங்களில் வெப்பம் பல மடங்கு அதிகரித்து, நுண்ணுயிர்கள் மரணிக்கின்றன.
'இந்த மண்ணை அப்புறப்படுத்திவிட்டு, வேறு வளமான மண்ணை நிரப்பி மறுபடியும் சாகுபடி செய்ய முடியாதா?’ என இங்குள்ள விவசாயிகளிடம் கேட்டேன். 'அதற்கு வாய்ப்பே இல்லை. ஏற்கெனவே பல முறை செய்து பார்த்தும், பலன் இல்லை. காரணம், அதிக ஆழத்துக்கு மண் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 அடி ஆழத்தில் இந்தக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பின் வீரியம் அதிகம். கோடை காலங்களில் இந்த நிலங்களில் தானாவே தீ பிடிக்கும்'' என்று திகில் கிளப்பினார்கள்.
''பத்து வருசத்துக்கு முன்ன எங்க நிலத்துல ஓ.என்.ஜி.சி அதிகாரிங்க குழாய் பதிச்சாங்க. மனசுக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனாலும் எங்களால தடுக்க முடியல. 'இது சென்ட்ரல் கவர்மென்ட் சம்பந்தப்பட்டது. இதுல நீங்க எதுவும் தடை சொல்ல முடியாது’னு அதிகாரிகள் சொல்லிட்டாங்க. ஆனா, கச்சா எண்ணெய் கசிஞ்சி, எங்களோட ஒரு ஏக்கர் நிலமும், பாழா போயிடுச்சு'' என்று அரசாங்கத்தின் இரும்புக் கரங்களில் சிக்கி தான் நசுங்கிக் கொண்டிருப்பதை கண்ணீர் மல்க என்னிடம் சொன்னார், ஒட்டநாச்சியார் குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகேஷ்.
இது ஒரு சோறு பதம்தான். இப்படி எண்ணெய் கசிவுக்கு தங்களின் பசுமை பூமியை பறிகொடுத்திருப்போர்... கொடுத்துக் கொண்டிருப்போரின் பட்டியல்... மிகப் பெரியது



Friday, 11 April 2014

புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்!



ஏப்ரல் மாதம் வந்துவிட்டது. புது நிதியாண்டில் நுழையப் போகிறோம். கடந்த ஆண்டில் நாம் செய்த தவறுகள் என்னென்ன? இந்த ஆண்டு நாம் செய்யவேண்டியது என்னென்ன என்று திட்டமிடும் காலம் இது.
கடந்த வருடம் முழுக்க, டாக்ஸை மிச்சப்படுத்தவேண்டுமே என்று அடித்துப்பிடித்து முதலீடு/இன்ஷூரன்ஸ் செய்தவர்கள் ரிலாக்ஸாகும் நேரம் இது. இந்தப் புது வருடத்திலாவது முதலில் இருந்தே நிதானமாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்; அதிகப்படியான லாபத்தை அள்ளவேண்டும்; கடைசி நேரப் போராட்டமே வேண்டாம் என்று யோசிக்கிறீர்களா? குட், நல்ல மாற்றத்துக்கான அறிகுறி இது.
புது வருடம் ஆரம்பிக்கும்போது எல்லா கம்பெனிகளும் ஒரு திட்டத்தைப்போடும். அடுத்த ஆண்டு அடையவேண்டிய இலக்கு என்ன, இதற்குச் செய்யவேண்டிய வேலைகள் என்னென்ன, எவ்வளவு செலவாகும் என்று ஊழியர்களிடம் கேட்டு ஒரு திட்டம்போடும். நம் சொந்த வாழ்க்கைக்கும் ஏறக்குறைய இப்படித் திட்டமிடுவதுதான் நல்லது.
பணத்தைக் கையாளுவதில் எல்லோரும் செய்யும் பெரிய தவறு என்ன தெரியுமா? திட்டமிடாமல், யோசிக் காமல் சட்டென்று செலவு செய்வது தான். அப்படியே பட்ஜெட் என்ற ஒரு கணக்குபோட்டு வைத்திருந்தாலும்கூட, பட்ஜெட்டில் கணக்கிடப்படாத‌ ஒன்றுக்காக, 'இது நம் பட்ஜெட்டில் இல்லையே’ என்று கொஞ்சம்கூட யோசிக்காமல் செலவு செய்துவிடுவது.
யோசித்துப்பாருங்கள்! வீடு கட்டவேண்டும் என்கிற நீண்டநாள் கனவு உங்களுக்குக் கைகூடி வருகிறது. உங்கள் கனவு வீடு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கொத்தனாரிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லி, எப்படி கட்டுவீர்கள் என்று ஒரு பிளான் போட்டுக் காட்ட முடியுமா எனக் கேட்கிறீர்கள். 'நீங்க சொன்னதெல்லாம் என் மனசுல இருக்கு. கவலையேபடாதீங்க. கச்சிதமா கட்டிக்குடுத்துடுறேன்'' எனக் கொத்தனார் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அவரிடம் வீடு கட்டும் வேலையைத் தருவீர்களா? நிச்சயம் தரமாட்டீர்கள். அவ்வளவு ஏன், ஒரு கைதேர்ந்த இன்ஜினீயரை வைத்து பிளான் போட்டு, வீடு கட்டும் போதே சில இடங்களில் இடிக்கிறதே! இப்படியிருக்க, வீட்டுக் கணக்கை மட்டும் வெறும் மனக்கணக்காக வைத்துச் செலவு செய்தால், அது சரிவருமா?
நம் வீட்டு நிதி நிர்வாகம்கூட நம் வீடு கட்டுகிறமாதிரிதான். சரியாகத் திட்டம்போட்டுப் படிப்படியாகக் கட்டினால்தான் ஒவ்வொரு கட்டமும் சிறப்பாக அமையும். ஆனால், நடப்பது என்ன? 'எல்லாம் என் மைண்டுல இருக்குது. எனக்குத் தெரியாததா என்னென்ன செலவு இருக்குன்னு, இதை எழுதிவேறப் பார்க்கணுமா? டைம் வேஸ்ட்’ என்று ஒதுக்கிவிடுகிறோம்.
திட்டம்போட்டு செலவு செய்யாமல், ஒவ்வொருநாளும் வரும் செலவுகளை அப்போதைக்கப்போது சமாளித்துக்கொண்டே போனால், ரிட்டையர்டாகி வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, சரியாக பிளான் போடாமல் கட்டப்பட்ட வீடுபோல, அரைகுறையாக, பணம் கிடைக்கும்போதெல்லாம் கட்டப்பட்ட வீடுபோல நம் வாழ்க்கை அலங்கோலமாக இருக்கும்.
ஆனால், உங்கள் குடும்ப பட்ஜெட்டை கொஞ்சம் பிளான் செய்துகொள்வதன்மூலம் உங்கள் வாழ்க்கையை மிக அழகானதாக்கிக் கொள்ளலாம். எப்படி என்கிறீர்களா? இதோ உங்கள் புது நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் டிப்ஸ்:
பட்ஜெட் போடுவது கஷ்டப்பட அல்ல!
'பட்ஜெட் போடுவது ஈஸி இல்லை. அது குழப்பும் விஷயம். நேரம் பிடிக்கும். மூளையைக் கசக்கவேண்டும். அதைச் செய்வது வேஸ்ட். செலவு அதுபாட்டுக்கு வந்துகொண்டுதான் இருக்கும். சமாளிக்கவேண்டியதுதான்’ என்றே பலரும் நினைக்கிறார்கள்.
முதலில் நீங்கள் புரிந்துக்கொள்ளவேண்டியது, பட்ஜெட் என்பது உங்களைக் கட்டுப்படுத்துவதற்கோ, கஷ்டப்படுத்துவதற்கோ அல்ல! உங்களுக்குச் சுதந்திரம் தருவதற்குதான்! பட்ஜெட் என்பது உங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்க அல்ல, இன்னும் சிம்பிளாக்கத்தான்! வரவு, செலவு சட்டென்று புரிந்துவிட்டால் பயப்படாமல் ஃப்ரீயாகச் செயல்படலாம். தைரியமாக ஒவ்வொரு அடியாகவைக்கலாம் உங்கள் இலக்குகளை நோக்கி!
செலவு பற்றித் தெளிவு வேண்டும்!
இதற்கு குறைந்தது ஒருமாதமேனும் செலவுக் கணக்கு எழுதிப்பார்த்தால்தான் செலவுகள் பற்றிய விவரங்களைத் துல்லியமாகப் படிக்க முடியும். உதாரணத்துக்கு, கணவர் அரிசி, பருப்பு வாங்கி வருகிறார் எனில் ஒருமாதத்துக்கு எத்தனை கிலோ அரிசி, பருப்பு செலவாகிறது என்று மனைவிக்குச் சொல்லமுடியாமல் போகலாம். காஸ் சிலிண்டர் எத்தனை நாளைக்கு வருகிறது என்று மனைவிக்குத் தெரியும். கணவருக்குக் குத்துமதிப்பாகத் தெரியலாம். அதனால் எந்தச் செலவையும் எழுதிப்பார்த்தால்தான் நமக்கு பல உண்மைகள் வெட்டவெளிச்சமாகும். கட்டாயம் சில மாதங்களுக்கு எழுதிப்பார்த்துவிட்டு பட்ஜெட் போட்டால், அட்டகாசமாக பட்ஜெட் தயாரித்துவிடலாம்.
இலக்குகள் பற்றித் தெரிய வேண்டும்!
செலவுகள் பற்றித் தெரிந்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் நாம் அடையவேண்டிய இலக்குகளையும் தெரிந்துவைத்திருப்பது. வீடு கட்டுவது/வாங்குவது, குழந்தை களின் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரி கட்டணம், திருமணம் என்று நீண்டகால இலக்குகள், துணிமணி, பண்டிகைச் செலவு போன்ற குறைந்த கால இலக்குகள் அவற்றுக்கான உத்தேச செலவுகள் ஆகியவற்றை எழுதிவையுங்கள்.
ஒருவர் போடுவது பட்ஜெட் அல்ல!
கணவர் மட்டும் போடும் பட்ஜெட் அல்லது மனைவி மட்டும் போடும் திட்டம் என்றுமே வெற்றி பெற்றதில்லை. இருவரும் இணைந்து கலந்துபேசி போடும் திட்டமே வெற்றி பெறும். வளர்ந்த பிள்ளைகள் இருந்தால் அவர்களையும் சேர்த்துகொண்டு பட்ஜெட் போடுங்கள். தேவை, மாத கடைசியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஹாயாக ஒரு மணி நேரம்தான். முதல்முறைதான் கொஞ்சம் நேரம் பிடிக்கும். போகப்போக வெறும் அரை மணியிலேயே அமர்க்களமாக பட்ஜெட் போட்டுவிடலாம்.
என்னதான் சொல்லுங்கள், பட்ஜெட் போடுவது கஷ்டமான வேலைதான் என்று நினைக்கிறீர்களா? அந்த வேலையை ஈஸியாகச் செய்துமுடிக்க மூன்று வழிகளைச் சொல்கிறேன், ஃபாலோ செய்துபாருங்கள்!
1. பட்ஜெட் போடுவதே 'முதல் வேலை’!
பட்ஜெட் போட்டுப்பார்த்து அதன்படி செலவு செய்வேன் என்று முதலில் முடிவெடுங்கள்! வரவு என்ன, செலவு என்ன என்று ஒரு கணக்கு எழுத்தில் இருந்தால், பல விஷயங்கள் சட்டென்று தெரியவரும். இதற்காக சில மணி நேரம் செலவிடுவது ஒன்றும் பெரிய இழப்பு இல்லை. 'நம் அப்பா, தாத்தா காலத்தில் எல்லாம் பட்ஜெட் போட்டார்களா என்ன? அவங்களெல்லாம் கெட்டா போயிட்டாங்க? நல்லா வாழலையா?' என்று கேட்கிறீர்களா? அந்தக் காலத்தில் பணவீக்கம் இவ்வளவு இல்லை. விவசாயம் தழைத்த காலம் அது. நெல்மூட்டைகள் அடுக்கப்பட்ட வீடுகள்தான் அந்தக் காலத்தில் அதிகம்.
ஆனால், இந்தக் காலத்தில்? ரூ.500 எடுத்துக்கொண்டு கடைக்குப்போனால் பை நிறைய வாங்க முடியாது; கைநிறையத்தான் வாங்க முடியும். காலத்துக்கேற்ப மாறிக்கொள்வதே புத்திசாலித்தனம்.
இப்போதுள்ள சூழ்நிலையைப் புரிந்துகொண்டு பட்ஜெட் போட்டு வாழாவிட்டால் ரேஸில் பின்தங்கிவிடுவோம். அதுகூடப் பரவாயில்லை. எல்லாரும் நன்றாக வாழ்வதைப் பார்த்து மனதுக்குள் ஏங்குவோம். ஆகவே, பட்ஜெட் போட யோசிக்காதீர்கள். ஆக்ஷனில் இறங்கி, அதை முதல்வேலையாக்கிக் கொள்ளுங்கள்!
2. செலவு கணக்கை உடனடியாக எழுதுங்கள்!
நோட்புத்தகமோ, கம்ப்யூட்டரோ செல்போனோ ஏதாவது ஒன்றில் உங்கள் செலவுகளை எழுதிவைக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். கைக்காசு எங்கே போகிறது என்று தெளிவாகத் தெரிந்தால்தான் பட்ஜெட் போடுவது வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்!
3. ஆட்டோ டெபிட் அவசியம்!
நீங்கள் ரெகுலராகக் கட்டவேண்டிய தொகைகளான வீட்டுக் கடன், வண்டிக் கடன் கிரெடிட் கார்டு கட்டணங்கள், ஊருக்கு அனுப்பவேண்டிய பணம், போன் பில் ஆகியவற்றைக்கூட ஆட்டோமேட்டிக்காகக் கட்டுமாறு உங்கள் வங்கிக்கு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் தந்துவிடலாம். இதனால் உரிய நேரத்தில் நீங்கள் செலுத்தவேண்டிய பணம்போய்ச் சேர்ந்துவிடும். இதனால் மனஉளைச்சல் மிச்சம், லேட் பேமன்ட் பெனால்டி மிச்சம் எனப் பல நன்மை கிடைக்கும்!
இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தித்து, பட்ஜெட் போட்டுப்பாருங்கள். இந்த நிதியாண்டின் இறுதியில் கணிசமான பணத்தை மிச்சம்பிடித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்!