Friday, 30 August 2013

Buying a builder's flat? Take these precautions !!!!!


''பல ஆண்டுகள் சென்னையில் எங்கெல்லாமோ அலைந்தேன், ஒரு நல்ல ஃப்ளாட் வாங்குவதற்காக.  கடைசியில் ஒரு புராஜெக்ட் எனக்குப் பிடிக்கவே, அந்த புரமோட்டர் கேட்ட பணத்தைத் தந்தேன். '2012 பொங்கல் பண்டிகைக்கு நீங்கள் புது வீட்டுக்கு ஜோரா கிரகப் பிரவேசம் செய்திடலாம்’ என்று சொன்னார் பில்டர். பில்டர் சொன்னதை நம்பி குடியிருந்த வாடகை வீட்டை பொங்கலுக்கு முன்பே காலி செய்வதாகச் சொல்லிவிட்டேன். ஆனால், பொங்கலுக்கு வீடு கிடைக்கவில்லை. அடுத்தப் பொங்கல் வந்துபோனபிறகும் வீடு கிடைக்கவில்லை. பில்டரிடம் கேட்டால், ''இன்னும் ஒரு மாதம் பொறுங்க'' என்று கடந்த பல மாதங்களாகவே, இதே பதிலைச் சொல்லி வருகிறார். இ.எம்.ஐ., வீட்டு வாடகை என இருபெரும் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் நான், தாங்க முடியாத மன உளைச்சலுக்கு உள்ளாகி பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கிறேன்! என் நிலை என் எதிரிக்குக்கூட வரக்கூடாது!'' 
இதே அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. புதிய புராஜெக்டை ஆரம்பிக்கும்போது பில்டர்கள் என்னென்ன வாக்குறுதி களைத் தருவார்கள்? அதில் பொய்யான வாக்குறுதிகளைக் கண்டுபிடித்து, தப்பிப்பது எப்படி என பல கேள்விகளை ஃபெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃப்ளாட் அண்ட் பில்டிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பி.மணிசங்கரைச் சந்தித்து கேட்டோம்.  
பில்டரின் அனுபவம்!  
வீடு வாங்கத் திட்டமிடும் முன்பே அந்த புரமோட்டர் அல்லது பில்டரை பற்றி விசாரிப்பது அவசியம். பெரிய நிறுவனங்கள் தவிர மற்ற புரமோட்டர்கள் பலரும் தங்களது புராஜெக்ட்களை அக்கம்பக்கத்திலேயே செய்திருப்பார்கள் என்பதால்,  பில்டரின் நம்பகத்தன்மைப் பற்றி விசாரிப்பது பெரிய விஷயமாக இருக்காது. வெளியூரில் பல புராஜெக்ட் முடித்துள்ளேன் என்று சொல்லும் பில்டர்கள் சொல்வதை நம்பவேண்டாம். அவர்கள் சொல்வதைத் தெரிந்தவர்கள் மூலம் விசாரித்தப் பிறகே நம்பலாம்.    
இடம்!
பில்டரின் நம்பகத்தன்மையை அறிந்துகொண்ட பிறகு, அந்த புராஜெக்ட் அமையும் மனை முறையாக உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதெல்லாம் பக்காவாக இருக்கும் என வாய்மொழியாகச் சொல்லப்படும் வாக்குறுதிகளை நம்பவேண்டாம். எந்தெந்த சர்வே எண், அது யாருக்குச் சொந்தமானது, தற்போதைய உரிமையாளர் யார் என்பது போன்ற விவரங்களை பில்டர் தரவேண்டும். பில்டர் பவர் மட்டும் வைத்துள்ளாரா அல்லது முழுமையாக உரிமை மாற்றம் பெற்றுள்ளாரா என்பதையும் பார்க்கவேண்டும். இதுதவிர, ப்ளான் அப்ரூவல் முறையாக வாங்கப்பட்டுள்ளதா, பூங்கா, விளையாட்டு மைதானம் போன்றவற்றுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆராயவேண்டும்.
ஒப்பந்தம்!
வீடு வாங்க முடிவெடுத்தப் பிறகு அதற்கான ஒப்பந்தத்தைத் தெளிவாகப் படியுங்கள். வீடு தொடர்பான அனைத்து விவரங் களும் ஒப்பந்தத்தில் இடம் பெறவேண்டும். ஒரே ஒப்பந்த ஷரத்துகள்தான் எல்லோருக்கும் என்று சொன்னால் அதை நாம் ஏற்கக் கூடாது. வீடு வாங்குபவரின் தேவைக்கு ஏற்ப  விவரங்களைச் சேர்க்கவோ, விலக்கவோ சம்மதிக்கும் புரமோட்டரைத் தேர்வு செய்யவேண்டும். ஒப்பந்தத்தில் முதன்மை விவரங்களாக ஒப்பந்தத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் கட்டுமானம் தொடர்பான விவரங்களும், துணை விவரங்களாக வீட்டு முகவரி மற்றும் ஃப்ளாட் எண் போன்ற விவரங்களும், கார் பார்க்கிங் வாங்கியிருந்தால் இணைப்பு விவரமாகவும் ஒப்பந்தத்தில் இருக்கவேண்டும்.
கண்காணிப்பு!
''நீங்க ஸ்பாட்டுக்கு வரவே தேவையில்லை'' என்று சொல்லும் பில்டர்களிடம் எச்சரிக்கைத் தேவை.ஒப்பந்தப்படி எல்லாம்  நடக்கும் என்று நினைக்காமல் அடிக்கடி போய் பார்த்து விட்டு வரவேண்டும். அப்போதுதான் தரமான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி கட்டடம் கட்டுகிறார்களா என்பது தெரியும்.  ஏதாவது மாற்றம் சொன்னால் அதை செய்து தரவேண்டும்.  
வரிகள்!
சேவை வரி மற்றும் வாட் போன்ற அரசுக்குக் கட்டவேண்டிய அனைத்து வரிகளையும் முறையாகச் செலுத்தும் பில்டராக இருக்க வேண்டும். பொதுவாக, ஒரு வீட்டுக்கு மேல் உள்ள குடியிருப்பு எனில் அவற்றுக்கு சேவை வரிக் கட்டவேண்டும். வரி விகிதங்களில் மாற்றம் கொண்டுவரும்போது அதை தெரியப்படுத்தவேண்டியது பில்டரின் வேலை. வாங்கும் வரிக்கு ரசீது தருபவராகவும் இருக்கிறாரா என்று கவனிக்க வேண்டும்.
பொதுவாக, சேவை வரியானது மொத்த திட்ட மதிப்பில் 4.98 சதவிகிதம் என்று கணக்கிடலாம். அதற்குமேல் பில்டர் கேட்கிறார் எனில், அவர் பணம் கறக்கிறார் என்று அர்த்தம். மேலும், சேவை வரி எவ்வளவு வருகிறதோ, அதற்கு மட்டும் சம்பந்தப்பட்ட துறையின் பெயரிலேயே பில்டரானவர் காசோலை கேட்டு வாங்கவேண்டும். முன்பணம் வாங்கிய பிறகு, வரி விகிதத்தில் ஏதாவது மாற்றம் வந்தால், அந்தத் தொகை எந்த அடிப்படையில் வாங்கப்படும் என்பதை எழுத்து மூலமாகக் கேட்கவேண்டும்.
காலதாமதம்!
குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டி ஒப்படைக்க வில்லை எனில், அதற்குரிய இழப்பீட்டை பில்டர் தரவேண்டும். அந்தப் பகுதியில் நிலவும் வாடகைக்கு ஏற்பவோ அல்லது ஏற்கெனவே நீங்கள் தந்துவரும் வாடகையை ஈடுசெய்வது போலவோ இந்த இழப்பீடுத் தொகையைக் கேட்கலாம். இதை பில்டர் ஏற்றுக்கொள்வதுபோல ஒப்பந்தத்தில் எழுதப்பட வேண்டும். அல்லது காலதாமதம் ஆகும்பட்சத்தில் பில்டரின் பொறுப்பு என்ன என்பதை ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
மாடல் வீடு!
சில பில்டர்கள் ஒரு மாடல் ஃப்ளாட்டை பக்காவாக கட்டிவைத்துவிட்டு, பிற்பாடு அதையே எல்லோருக்கும் காட்டுவார்கள். சிலர் மினியேச்சர் மாடல் என்கிற பெயரில் பொம்மை வீட்டை கட்டி வைத்திருப்பார்கள். இது எதுவும் 100 சதவிகிதம் நிஜத்தில் வராது. ப்ளான் அப்ரூவல்படி உள்ள அளவுகளில் வீட்டைக் கட்டுவதை உறுதி செய்யவேண்டும். ப்ளானில் இல்லாதவகையில் கட்டட அமைப்பை மாற்றியோ, அளவுகளைக் குறைக்கவோ, கூட்டவோ கூடாது. சன்ஷேடு, காம்பவுண்ட் சுவர் போன்றவற்றில் அளவுகளைக் குறைத்துவிடுவார்கள். இதுதவிர, 10 அடி உயர சுவர் என்றால் 9 அடிஅல்லது 9.5 அடி என சுவர்களின் உயரத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. மேலும், டைல்ஸ் மற்றும் மார்பிள் வகைகளில் மிகக் கவனமாக இருக்கவேண்டும். தரமான அல்லது பிராண்டட் டைல்ஸ், மார்பிள் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடுவார்கள். ஆனால் எந்த நிறுவனம், அளவு என்ன, தரம் என்ன என்பதையும் குறிப்பிட்டிருந்தால்தான் சரியான அக்ரிமென்ட். மார்பிள் கற்கள் என்றால் சாம்பிள் வாங்கி விவரம் தெரிந்தவர்கள் மூலம் தரத்தைச் சோதிக்கவேண்டும். கட்டட வேலைகள் நடக்கும்போதே இவற்றை கண்காணித்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நிறைவுச் சான்றிதழ்! (Completion certificate)
ப்ளான் அப்ரூவல்படி வீடு அமைந் திருந்தால்தான் நிறைவுச் சான்றிதழ் எளிதில் கிடைக்கும். குடியிருப்பின் ஒட்டுமொத்த வேலைகளையும் முடித்து, குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பித்து, அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தபிறகே இந்த அனுமதி கிடைக்கும். வீட்டு வேலைகள் முடிந்தாலும், லிஃப்ட், கிளப் ஹவுஸ், கம்யூனிட்டி ஹால், நீச்சல் குளம் போன்ற குடியிருப்பின் பொது வசதிகள் முடிவடையாமல் இருந்தால், இச்சான்றிதழ் கிடைக்காது. இந்தச் சான்றிதழ் பெறாமல் நாம் வீட்டில் குடியேறக்கூடாது. அப்படி போய்விட்டால்,  பொறுமையாக வாங்கித் தருகிறோம் என்று சொல்லி இழுத்தடிப்பார்கள். இச்சான்றிதழ் வாங்கவில்லை எனில், குடிநீர், கழிவு நீர் இணைப்புகள் கிடைக்காது என்பதை மறந்துவிடக்கூடாது.    
கார் பார்க்கிங்!
கார் பார்க்கிங் என தனியாகக் கட்டணம் இல்லை என்று சொன்னால் நம்ப வேண்டாம். வீடு வாங்க ஒப்பந்தம் போடும்போதே கார் பார்க்கிங் என்று பொத்தாம் பொதுவாக எழுதாமல், எந்த இடம், அதன் நான்கு எல்லைகள் என்ன என்று எழுதித் தரும்படி பில்டரிடம் கேளுங்கள். கார் பார்க்கிங் இடத்தைக் கட்டட மதிப்போடுச் சேர்க்காமல் அதற்கென்று தனியாக மதிப்பிட வேண்டும். சில பில்டர்கள் ஓப்பன் ஏரியாவில் கார் பார்க்கிங் வசதி செய்து தருகிறேன் என்று தனியாகக் கட்டணம் வசூலிக்கலாம். எனவே, உஷார்!
கிளப் ஹவுஸ்/நீச்சல் குளம்..!
லைஃப்ஸ்டைல் அபார்ட்மென்ட்களில் இந்த வகையில் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கப்படும். ஆனால், ஒவ்வொன்றுக்கும் உங்களிடமிருந்துதான் பணம் கறக்கப்படும். பொதுவாக, இந்த வசதிகள் அனைத்தும் குடியிருப்பின் அனைவருக்கும் பொதுவானது என்பதால் இவற்றை பயன்படுத்தத் தனிக் கட்டணம் கேட்டால் தரவேண்டாம். உடற்பயிற்சிக் கூடம், குழாய் மூலம் எரிவாயு இணைப்பு, கம்யூனிட்டி ஹால், கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், பூங்கா, குழந்தைகள் விளையாடுமிடம் என்பது போன்றவை வருகிறது என்பார்கள். ஆனால், இவற்றுக்கான எந்தக் கருவியும் இருக்காது. எனவே, அனைத்துக் கருவிகளும் வாங்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
பராமரிப்புக் கட்டணம்!
பொதுவாக, வீடு கட்டி முடிந் ததும், அனைத்து வீடுகளிலும் குடிவராத நிலையில் பராமரிப்பு வேலைகளுக்கான கட்டணத்தை பில்டர் வசூலிக்க ஆரம்பித்துவிடுவார். இதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், எத்தனை வீடு வந்துள்ளது, எவ்வளவு செலவாகிறது என்பதை விசாரித்து, அதில் ஒரு பங்கு பணத்தைத் தந்தாலே போதும். இந்தப் பராமரிப்புத் தொகையை ஃபிக்ஸட் ஆக இருப்பதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. செலவுக்கேற்ப தொகையைக் கூட அல்லது  குறைகிற மாதிரி இருக்கவேண்டும்.  
பெயர் மாற்றம்!
குடியிருப்பின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது என்றால், ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு உள்ளிட்டவற்றை உடனடியாக பெயர் மாற்றம் தரவேண்டியது பில்டரது வேலை. வீட்டின் மொத்த மதிப்பில் இக்கட்டணம் சேருமா, இல்லையா என்பதை முன்கூட்டியே ஒப்பந்தத்தில் சேர்க்கவேண்டும்.  
வெளிப்படைத் தன்மை!
பணப் பரிவர்த்தனைகளை காசோலை மூலம் வாங்கிக்கொள்ளும் பில்டரே நல்லவர்.  வாங்கும் பணத்துக்கு ரசீது, பான் எண், டின் எண் போன்றவற்றை கொடுக்கத் தயங்காதவராக இருக்கவேண்டும்.
பில்டர்கள் வானளாவ அள்ளிவிடும் வாக்குறுதிகளையும், அதிலிருந்து உங்களைத் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளையும் சொல்லிவிட்டோம். இனி உங்கள் சமர்த்து!
--- நீரை.மகேந்திரன்,

Friday, 23 August 2013

குடிக்கலாமா கேன் தண்ணீரை?



ஆறு, ஏரி, கிணற்று நீரையே குடிநீராகப் பயன்படுத்தி, எந்த உடல் நலக் கோளாறும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றோ, கேன் தண்ணீர்தான் தாகம் தீர்ப்பதற்கான ஒரே வழி என்றாகிவிட்டது. அடுத்த ஊருக்குச் சென்று தண்ணீர் குடித்தால்கூட உடனே தொண்டைக் கட்டிக்கொண்டு, சளி இருமல் தொந்தரவு வந்துவிடுகிறது. குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை இன்றுவரை அரசால் அளிக்க முடியவில்லை. அரசு அளிக்கும் நீரை குடிநீராகப் பயன்படுத்த நடுத்தர மக்கள் மட்டுமல்ல; ஏழை மக்களும் கூடத் தயங்குகின்றனர். இதனால் சின்னச் சின்ன கடைகளில்கூட தண் ணீர் கேன் விற்பனை ஜோராக நடக்கிறது
கேன்களில் அடைக் கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் உண்மையில் எங்கிருந்து கிடைக்கிறது. எப்படிச் சுத்தப்படுத்தப்படுகிறது. எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பதுபற்றி யாருக்கும் தெரிவதில்லை. பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு நடத்தியபோதுதான் புற்றீசல்போல ஆயிரக்கணக்கில் கேன் தண்ணீர் நிறுவனங்கள் இருப்பது தெரியவந்தது. என்னதான் புது லேபிள் ஒட்டினாலும், பலர் குழாய் நீரையே பிடித்து கேனில் அடைத்து விற்பனை செய்வதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது.
உண்மையில், தண்ணீர் எப்படி சுத்தம் செய்யப்படுகிறது? இப்படிப்பட்ட தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொழில் நுட்ப ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் பேசினோம்.
கேன் குடிநீர்பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலரும், பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில துணைச் செயலாளருமான எஸ்.கே.சங்கர் கூறுகையில், 'கேன், பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரில் பூச்சிக்கொல்லி இருக்கிறது. ஜெர்மனியில் உள்ள ஹைடல்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ஷோடிக் என்னும் ஆராய்ச்சியாளர், ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் கிடைக்கும் பாட்டில் நீரில் ஆன்டிமோனி என்ற நச்சு கலந்திருப்பதாக கண்டறிந்தார். நீரில் இந்த நச்சு இல்லை. கேன், பெட் பாட்டில் தயாரிக்கப்படும் மூலப் பொருட்களில் இந்த நஞ்சு இருப்பதுதான் தண்ணீர் விஷமாகக் காரணம். என்னதான் தண்ணீரைச் சுத்தப்படுத்தினாலும், பாட்டிலில் அடைக்கும்போது இந்த நச்சு கலந்துவிடுகிறது. நச்சு அதிகரிக்கும்போது சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்னை ஏற்படுகிறது.
இது தவிர, இந்த பாட்டிலில் பிஸ்பினால் (Bisphenol A) என்ற நச்சு உள்ளது. இது கருவில் உள்ள சிசு முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. 'இன்றைக்கு பெண் குழந்தைகள் மிக விரைவாக பூப்பெய்துவதற்கு இந்த பிஸ்பினால் -வும் ஒரு காரணம்என்கிறது அமெரிக்க நலவாழ்வு நிறுவனத்தின் அங்கமான 'தேசிய நச்சு இயல் திட்டம்என்ற அமைப்பு. மேலும், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட வேறு சில பாதிப்புகளையும் இது ஏற்படுத்துகிறது என்றும் அந்த நிறுவனம் எச்சரிக்கிறது.
2008-ம் ஆண்டு, சென்னை மாநகராட்சி மேற்கொண்ட ஆய்வில், மனிதக் கழிவில் உள்ள நச்சுக்கள் பாட்டில் குடிநீரில் உள்ளதாக தெரியவந்தது. சென்னையில் விற்கப்படும் கேன் நீரைச் சோதனை செய்ததில் ஈகோலை மற்றும் கோலிபார்ம் கிருமிகள் இருப்பது தெரியவந்தது. இப்படி பாட்டில் மற்றும் கேன் குடிநீரில் ஏராளமான ஆபத்துக்கள் உள்ளன.
சிங்கப்பூர், நியூயார்க், லண்டன் போன்ற நூற்றுக்கணக்கான நகரங்களில் அரசாங்கமே பாதுகாப்பான குடிநீரை குழாய்களில் விநியோகம் செய்கிறது. ஆட்சியாளர் முதல் சாதாரண குடிமக்கள் வரை அனைவரும் அந்த நீரையே பயன்படுத்துகின்றனர். அங்கு எல்லாம் இது சாத்தியமாகும்போது இங்கு மட்டும் ஏன் இது சாத்தியமாகாது?
தமிழகம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலம். ஆனால், மழைப் பற்றாக்குறை மாநிலம் இல்லை. இதனால்தான் நம் முன்னோர் 39,000-க்கும் மேற்பட்ட ஏரிகளை வெட்டினர். இவற்றைப் பாதுகாக்கவோ, பராமரிக்கவோ அரசும், மக்களும் தவறிவிட்டனர். இதனால்தான் விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய நிலைக்கு சென்றுள்ளோம். சென்னையில் மட்டும் வருடத்துக்கு சராசரியாக 1200 மி.மீ. மழை பொழிகிறது. நகரின் ஒட்டுமொத்த வருடத் தேவையைவிட அதிகம் இது. ஆனால், இந்த மழை நீரை சேகரிக்கவோ, பாதுகாக்கவோ அரசிடம் உரிய திட்டம் இல்லை. சென்னை மக்கள் மட்டும் ஒரு வருடத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தண்ணீருக்குச் செலவிடுகின்றனர். இது ஒவ்வோர் ஆண்டும் 40 சதவிகிதம் என்ற அளவுக்கு அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்டச் சூழ்நிலையில் அரசு நினைத்தால் 1000 மடங்கு குறைந்த செலவில் பாதுகாப்பானக் குடிநீரை விநியோகிக்க முடியும். இதற்கான தொழில்நுட்பமும், நிதியும் அரசுக்கு பெரிய சிக்கலாக இருக்காது. இதை நிறைவேற்ற ஆள்வோரின் ஆழ்ந்த விருப்பமும், அரசியல் உறுதியும்தான் தேவை' என்றார்.
'கேன் தண்ணீர் பலகட்டப் பரிசோதனைக்குப் பிறகே விற்பனைக்கு அளிக்கப்படுகிறது' என்கிறார் தண்ணீரை பரிசோதிக் கும் மைக்ரோ பயாலஜிஸ்டான ஜெயந்தி. வாட்டர் பிளான்ட்களில் தண்ணீர் சுத்திகரிப்புச் செய்வது பற்றி அவர் கூறுகையில், 'போர் தண்ணீர், கிணற்று நீர், லாரிகளில் கொண்டு வரப்படும் நீர் ஆகியவற்றை சுத்தம் செய்து மக்கள் குடிக்கும் வகையில் மாற்றும் பணியை நாங்கள் செய்கிறோம். இந்தத் தண்ணீரில் டி.டி.எஸ். (Total dissolved solids) என்பது எவ்வளவு என முதலில் கண்டறிய வேண்டும். குடிக்கத் தகுதியானதுதானா என்பதை முடிவுசெய்வது இந்த டி.டி.எஸ்.-தான். டி.டி.எஸ். அளவு அதிகரிக்கும்போது  தண்ணீர் துவர்ப்பாக, உப்பாக இருக்கும். டி.டி.எஸ். எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கண்டறிந்தபிறகு, தண்ணீரைச் சுத்தப்படுத்தும் செயல்பாடு தொடங்கும்.
முதலில் கார்பன் பில்ட்டர் என்ற வடிகட்டியில் தண்ணீர் செலுத்தப்படும். இதில் மிதக்கும் தூசுகள் வடிகட் டப்படும். பிறகு சான்ட் பில்ட்டர் எனப்படும் மணல் வடிகட்டியில் நீர் செலுத்தப்படும். இப்போது கலங்கலாக இருந்த நீரானது தெளிவாகும். இதன் பிறகு மைக்ரான் பில்ட்டர் எனப்படும் மிக நுண்ணிய தூசு, கிருமிகளை வடிகட்டும் வடிகட்டியினுள் நீர் செலுத்தப்படும். முதலில் 0.5 மைக்ரான் வடிகட்டியினுள் தண்ணீர் சுத்திகரிக்கப்படும், அதைத் தொடர்ந்து 0.1 மைக்ரான் அளவுள்ள மிகவும் நுண்ணிய வடிகட்டியினுள் செலுத்தி தண்ணீரில் உள்ள எல்லா தூசுக்கள், நுண்ணிய பொருட்கள், கிருமிகள் வடிகட்டி சுத்தப்படுத்தப்படும்.
இதன் பிறகு ரிவர்ஸ்ஆஸ்மோசிஸ் எனப்படும் சவ்வூடு பரவல் முறையில், தண்ணீர் மிக அதிக அழுத்தத்தில் செலுத்தப்பட்டு வெளிவரும்போது மிகத் தூய்மையானதாக, குடிக்கத் தகுந்ததாக கிடைக்கும். இந்தத் தண்ணீரில் அல்ட்ரா வயலட் கதிர் செலுத்தி 100 சதவிகிதம் சுத்தமான குடிநீராக மாற்றப்பட்டு கேன்களில் நிரப்பப்பட்டு, மக்களுக்குக் குடிக்க அளிக்கப்படுகிறது. பெரும்பான்மையான நிறுவனங்கள் இந்த சுத்திகரிப்பு முறையைப் பயன்படுத்துகின்றன. இந்தச் சுத்திகரிப்பு அனைத்தையும் முறையாக செய்தாலே தண்ணீர் பாதுகாப்பானதாக இருக்கும்.
இதன்பிறகு, மைக்ரோபயாலஜிஸ்ட், கெமிஸ்ட் ஆகியோர் இந்த நீரைப் பரிசோதனைகளைச் செய்வர். மைக்ரோபயாலஜியில் ஆறு விதமான பரிசோதனைகள் செய்து, அந்தத் தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதை உறுதிப்படுத்துவோம். கெமிஸ்ட்கள் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு தாது உப்புக்கள் உள்ளதா என்பதை ஆறு - ஏழு வகையான பரிசோதனைகள் செய்து உறுதிப்படுத்துவார்கள். அதன் பிறகே கேனில் நிரப்பப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்தப் பரிசோதனைகளை எங்கள் ஆய்வகத்தில் மட்டும் செய்வதில்லை; மாதத்துக்கு ஒரு முறை அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் கொடுத்து உறுதிப்படுத்திக்கொள்வோம்'' என்றார்.
'சுத்திகரிப்பு முறைகள் என்னதான் துல்லியமாக இருந்தாலும், தண்ணீர் அடைக்கப்படும் கேனும், அது வைக்கப்படும் கிடங்குகளும் பாதுகாப்பானதாக இல்லை எனில் அந்தத் தண்ணீர் கெட்டுவிடும்'' என்கிறார் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சி.பி.ராஜா.
'சுத்திகரிக்கப்பட்ட நீரை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். தேவை அதிகமாக இருப்பதால் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் விற்பனையாகி விடுகிறது. தண்ணீர் கேன்களை சுத்தமான, சூரிய ஒளி நேரடியாகப் படாத இடத்தில் வைக்கவேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீரானது எளிதில் மற்ற பொருட்களின் மணத்தைக் கவரும் தன்மை கொண்டது. எனவே, அதன் அருகில் இறைச்சி, ரசாயனங்கள் என எதையும் வைக்கக்கூடாது' என்றார்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறித்து டாக்டர் புகழேந்தி கூறுகையில், 'தண்ணீர் வியாபாரத்தில் அதிகப்படியான வருவாய் கிடைப்பதால் அது தனிநபர் சொத்தாக மாறிவிட்டது. தனியார் நிறுவனங்கள் பெருமளவில் நீரை உறிஞ்சி விற்பனை செய்கின்றன. தண்ணீரில் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் இருக்கக் கூடாது. குறிப்பிட்ட அளவுக்கு தாது உப்புக்கள் இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த, தண்ணீர் நிறுவனங்கள் பரிசோதனை செய்யும். இந்தப் பரிசோதனை எந்த அளவுக்கு உண்மையானது என்பது மக்களுக்கு எப்படித் தெரியும்? இதை அவ்வப்போது வெளிப்படையாக மக்கள் முன்னிலையில் செய்வதன் மூலம் தான் அது பாதுகாப்பான குடிநீரா என்பது தெரியவரும்.
உலகில் 23 சதவிகித நோய்கள் நீர் மூலம் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. வயிற்றுப்போக்கு ஆரம்பித்து, ஹெபாடைடிஸ் வரையிலும் பல நோய்கள் ஏற்படுகிறது. பாதுகாப்பாக ஸ்டோரேஜ் செய்யவில்லை எனில் எலிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும், பல நிறுவனங்கள் சுத்திகரிப்பு ஏதும் செய்யாமல் நேரடியாக கேன்களில் நீரைப் பிடித்து விற்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது அரசின் கடமை' என்றார்.