''பல ஆண்டுகள் சென்னையில் எங்கெல்லாமோ அலைந்தேன், ஒரு நல்ல ஃப்ளாட் வாங்குவதற்காக. கடைசியில் ஒரு புராஜெக்ட் எனக்குப் பிடிக்கவே, அந்த புரமோட்டர் கேட்ட பணத்தைத் தந்தேன். '2012 பொங்கல் பண்டிகைக்கு நீங்கள் புது வீட்டுக்கு ஜோரா கிரகப் பிரவேசம் செய்திடலாம்’ என்று சொன்னார் பில்டர். பில்டர் சொன்னதை நம்பி குடியிருந்த வாடகை வீட்டை பொங்கலுக்கு முன்பே காலி செய்வதாகச் சொல்லிவிட்டேன். ஆனால், பொங்கலுக்கு வீடு கிடைக்கவில்லை. அடுத்தப் பொங்கல் வந்துபோனபிறகும் வீடு கிடைக்கவில்லை. பில்டரிடம் கேட்டால், ''இன்னும் ஒரு மாதம் பொறுங்க'' என்று கடந்த பல மாதங்களாகவே, இதே பதிலைச் சொல்லி வருகிறார். இ.எம்.ஐ., வீட்டு வாடகை என இருபெரும் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் நான், தாங்க முடியாத மன உளைச்சலுக்கு உள்ளாகி பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கிறேன்! என் நிலை என் எதிரிக்குக்கூட வரக்கூடாது!''
இதே அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. புதிய புராஜெக்டை ஆரம்பிக்கும்போது பில்டர்கள் என்னென்ன வாக்குறுதி களைத் தருவார்கள்? அதில் பொய்யான வாக்குறுதிகளைக் கண்டுபிடித்து, தப்பிப்பது எப்படி என பல கேள்விகளை ஃபெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃப்ளாட் அண்ட் பில்டிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பி.மணிசங்கரைச் சந்தித்து கேட்டோம்.
பில்டரின் அனுபவம்!
வீடு வாங்கத் திட்டமிடும் முன்பே அந்த புரமோட்டர் அல்லது பில்டரை பற்றி விசாரிப்பது அவசியம். பெரிய நிறுவனங்கள் தவிர மற்ற புரமோட்டர்கள் பலரும் தங்களது புராஜெக்ட்களை அக்கம்பக்கத்திலேயே செய்திருப்பார்கள் என்பதால், பில்டரின் நம்பகத்தன்மைப் பற்றி விசாரிப்பது பெரிய விஷயமாக இருக்காது. வெளியூரில் பல புராஜெக்ட் முடித்துள்ளேன் என்று சொல்லும் பில்டர்கள் சொல்வதை நம்பவேண்டாம். அவர்கள் சொல்வதைத் தெரிந்தவர்கள் மூலம் விசாரித்தப் பிறகே நம்பலாம்.
இடம்!
பில்டரின் நம்பகத்தன்மையை அறிந்துகொண்ட பிறகு, அந்த புராஜெக்ட் அமையும் மனை முறையாக உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதெல்லாம் பக்காவாக இருக்கும் என வாய்மொழியாகச் சொல்லப்படும் வாக்குறுதிகளை நம்பவேண்டாம். எந்தெந்த சர்வே எண், அது யாருக்குச் சொந்தமானது, தற்போதைய உரிமையாளர் யார் என்பது போன்ற விவரங்களை பில்டர் தரவேண்டும். பில்டர் பவர் மட்டும் வைத்துள்ளாரா அல்லது முழுமையாக உரிமை மாற்றம் பெற்றுள்ளாரா என்பதையும் பார்க்கவேண்டும். இதுதவிர, ப்ளான் அப்ரூவல் முறையாக வாங்கப்பட்டுள்ளதா, பூங்கா, விளையாட்டு மைதானம் போன்றவற்றுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆராயவேண்டும்.
ஒப்பந்தம்!
வீடு வாங்க முடிவெடுத்தப் பிறகு அதற்கான ஒப்பந்தத்தைத் தெளிவாகப் படியுங்கள். வீடு தொடர்பான அனைத்து விவரங் களும் ஒப்பந்தத்தில் இடம் பெறவேண்டும். ஒரே ஒப்பந்த ஷரத்துகள்தான் எல்லோருக்கும் என்று சொன்னால் அதை நாம் ஏற்கக் கூடாது. வீடு வாங்குபவரின் தேவைக்கு ஏற்ப விவரங்களைச் சேர்க்கவோ, விலக்கவோ சம்மதிக்கும் புரமோட்டரைத் தேர்வு செய்யவேண்டும். ஒப்பந்தத்தில் முதன்மை விவரங்களாக ஒப்பந்தத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் கட்டுமானம் தொடர்பான விவரங்களும், துணை விவரங்களாக வீட்டு முகவரி மற்றும் ஃப்ளாட் எண் போன்ற விவரங்களும், கார் பார்க்கிங் வாங்கியிருந்தால் இணைப்பு விவரமாகவும் ஒப்பந்தத்தில் இருக்கவேண்டும்.
கண்காணிப்பு!
''நீங்க ஸ்பாட்டுக்கு வரவே தேவையில்லை'' என்று சொல்லும் பில்டர்களிடம் எச்சரிக்கைத் தேவை.ஒப்பந்தப்படி எல்லாம் நடக்கும் என்று நினைக்காமல் அடிக்கடி போய் பார்த்து விட்டு வரவேண்டும். அப்போதுதான் தரமான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி கட்டடம் கட்டுகிறார்களா என்பது தெரியும். ஏதாவது மாற்றம் சொன்னால் அதை செய்து தரவேண்டும்.
வரிகள்!
சேவை வரி மற்றும் வாட் போன்ற அரசுக்குக் கட்டவேண்டிய அனைத்து வரிகளையும் முறையாகச் செலுத்தும் பில்டராக இருக்க வேண்டும். பொதுவாக, ஒரு வீட்டுக்கு மேல் உள்ள குடியிருப்பு எனில் அவற்றுக்கு சேவை வரிக் கட்டவேண்டும். வரி விகிதங்களில் மாற்றம் கொண்டுவரும்போது அதை தெரியப்படுத்தவேண்டியது பில்டரின் வேலை. வாங்கும் வரிக்கு ரசீது தருபவராகவும் இருக்கிறாரா என்று கவனிக்க வேண்டும்.
பொதுவாக, சேவை வரியானது மொத்த திட்ட மதிப்பில் 4.98 சதவிகிதம் என்று கணக்கிடலாம். அதற்குமேல் பில்டர் கேட்கிறார் எனில், அவர் பணம் கறக்கிறார் என்று அர்த்தம். மேலும், சேவை வரி எவ்வளவு வருகிறதோ, அதற்கு மட்டும் சம்பந்தப்பட்ட துறையின் பெயரிலேயே பில்டரானவர் காசோலை கேட்டு வாங்கவேண்டும். முன்பணம் வாங்கிய பிறகு, வரி விகிதத்தில் ஏதாவது மாற்றம் வந்தால், அந்தத் தொகை எந்த அடிப்படையில் வாங்கப்படும் என்பதை எழுத்து மூலமாகக் கேட்கவேண்டும்.
காலதாமதம்!
குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டி ஒப்படைக்க வில்லை எனில், அதற்குரிய இழப்பீட்டை பில்டர் தரவேண்டும். அந்தப் பகுதியில் நிலவும் வாடகைக்கு ஏற்பவோ அல்லது ஏற்கெனவே நீங்கள் தந்துவரும் வாடகையை ஈடுசெய்வது போலவோ இந்த இழப்பீடுத் தொகையைக் கேட்கலாம். இதை பில்டர் ஏற்றுக்கொள்வதுபோல ஒப்பந்தத்தில் எழுதப்பட வேண்டும். அல்லது காலதாமதம் ஆகும்பட்சத்தில் பில்டரின் பொறுப்பு என்ன என்பதை ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
மாடல் வீடு!
சில பில்டர்கள் ஒரு மாடல் ஃப்ளாட்டை பக்காவாக கட்டிவைத்துவிட்டு, பிற்பாடு அதையே எல்லோருக்கும் காட்டுவார்கள். சிலர் மினியேச்சர் மாடல் என்கிற பெயரில் பொம்மை வீட்டை கட்டி வைத்திருப்பார்கள். இது எதுவும் 100 சதவிகிதம் நிஜத்தில் வராது. ப்ளான் அப்ரூவல்படி உள்ள அளவுகளில் வீட்டைக் கட்டுவதை உறுதி செய்யவேண்டும். ப்ளானில் இல்லாதவகையில் கட்டட அமைப்பை மாற்றியோ, அளவுகளைக் குறைக்கவோ, கூட்டவோ கூடாது. சன்ஷேடு, காம்பவுண்ட் சுவர் போன்றவற்றில் அளவுகளைக் குறைத்துவிடுவார்கள். இதுதவிர, 10 அடி உயர சுவர் என்றால் 9 அடிஅல்லது 9.5 அடி என சுவர்களின் உயரத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. மேலும், டைல்ஸ் மற்றும் மார்பிள் வகைகளில் மிகக் கவனமாக இருக்கவேண்டும். தரமான அல்லது பிராண்டட் டைல்ஸ், மார்பிள் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடுவார்கள். ஆனால் எந்த நிறுவனம், அளவு என்ன, தரம் என்ன என்பதையும் குறிப்பிட்டிருந்தால்தான் சரியான அக்ரிமென்ட். மார்பிள் கற்கள் என்றால் சாம்பிள் வாங்கி விவரம் தெரிந்தவர்கள் மூலம் தரத்தைச் சோதிக்கவேண்டும். கட்டட வேலைகள் நடக்கும்போதே இவற்றை கண்காணித்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நிறைவுச் சான்றிதழ்! (Completion certificate)
ப்ளான் அப்ரூவல்படி வீடு அமைந் திருந்தால்தான் நிறைவுச் சான்றிதழ் எளிதில் கிடைக்கும். குடியிருப்பின் ஒட்டுமொத்த வேலைகளையும் முடித்து, குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பித்து, அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தபிறகே இந்த அனுமதி கிடைக்கும். வீட்டு வேலைகள் முடிந்தாலும், லிஃப்ட், கிளப் ஹவுஸ், கம்யூனிட்டி ஹால், நீச்சல் குளம் போன்ற குடியிருப்பின் பொது வசதிகள் முடிவடையாமல் இருந்தால், இச்சான்றிதழ் கிடைக்காது. இந்தச் சான்றிதழ் பெறாமல் நாம் வீட்டில் குடியேறக்கூடாது. அப்படி போய்விட்டால், பொறுமையாக வாங்கித் தருகிறோம் என்று சொல்லி இழுத்தடிப்பார்கள். இச்சான்றிதழ் வாங்கவில்லை எனில், குடிநீர், கழிவு நீர் இணைப்புகள் கிடைக்காது என்பதை மறந்துவிடக்கூடாது.
கார் பார்க்கிங்!
கார் பார்க்கிங் என தனியாகக் கட்டணம் இல்லை என்று சொன்னால் நம்ப வேண்டாம். வீடு வாங்க ஒப்பந்தம் போடும்போதே கார் பார்க்கிங் என்று பொத்தாம் பொதுவாக எழுதாமல், எந்த இடம், அதன் நான்கு எல்லைகள் என்ன என்று எழுதித் தரும்படி பில்டரிடம் கேளுங்கள். கார் பார்க்கிங் இடத்தைக் கட்டட மதிப்போடுச் சேர்க்காமல் அதற்கென்று தனியாக மதிப்பிட வேண்டும். சில பில்டர்கள் ஓப்பன் ஏரியாவில் கார் பார்க்கிங் வசதி செய்து தருகிறேன் என்று தனியாகக் கட்டணம் வசூலிக்கலாம். எனவே, உஷார்!
கிளப் ஹவுஸ்/நீச்சல் குளம்..!
லைஃப்ஸ்டைல் அபார்ட்மென்ட்களில் இந்த வகையில் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கப்படும். ஆனால், ஒவ்வொன்றுக்கும் உங்களிடமிருந்துதான் பணம் கறக்கப்படும். பொதுவாக, இந்த வசதிகள் அனைத்தும் குடியிருப்பின் அனைவருக்கும் பொதுவானது என்பதால் இவற்றை பயன்படுத்தத் தனிக் கட்டணம் கேட்டால் தரவேண்டாம். உடற்பயிற்சிக் கூடம், குழாய் மூலம் எரிவாயு இணைப்பு, கம்யூனிட்டி ஹால், கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், பூங்கா, குழந்தைகள் விளையாடுமிடம் என்பது போன்றவை வருகிறது என்பார்கள். ஆனால், இவற்றுக்கான எந்தக் கருவியும் இருக்காது. எனவே, அனைத்துக் கருவிகளும் வாங்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
பராமரிப்புக் கட்டணம்!
பொதுவாக, வீடு கட்டி முடிந் ததும், அனைத்து வீடுகளிலும் குடிவராத நிலையில் பராமரிப்பு வேலைகளுக்கான கட்டணத்தை பில்டர் வசூலிக்க ஆரம்பித்துவிடுவார். இதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், எத்தனை வீடு வந்துள்ளது, எவ்வளவு செலவாகிறது என்பதை விசாரித்து, அதில் ஒரு பங்கு பணத்தைத் தந்தாலே போதும். இந்தப் பராமரிப்புத் தொகையை ஃபிக்ஸட் ஆக இருப்பதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. செலவுக்கேற்ப தொகையைக் கூட அல்லது குறைகிற மாதிரி இருக்கவேண்டும்.
பெயர் மாற்றம்!
குடியிருப்பின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது என்றால், ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு உள்ளிட்டவற்றை உடனடியாக பெயர் மாற்றம் தரவேண்டியது பில்டரது வேலை. வீட்டின் மொத்த மதிப்பில் இக்கட்டணம் சேருமா, இல்லையா என்பதை முன்கூட்டியே ஒப்பந்தத்தில் சேர்க்கவேண்டும்.
வெளிப்படைத் தன்மை!
பணப் பரிவர்த்தனைகளை காசோலை மூலம் வாங்கிக்கொள்ளும் பில்டரே நல்லவர். வாங்கும் பணத்துக்கு ரசீது, பான் எண், டின் எண் போன்றவற்றை கொடுக்கத் தயங்காதவராக இருக்கவேண்டும்.
பில்டர்கள் வானளாவ அள்ளிவிடும் வாக்குறுதிகளையும், அதிலிருந்து உங்களைத் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளையும் சொல்லிவிட்டோம். இனி உங்கள் சமர்த்து!
--- நீரை.மகேந்திரன்,
No comments:
Post a Comment