வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் செய்துகொள்ளும் வசதி இப்போது வந்துவிட்டது. பி.எஃப். கையிருப்பு தொகையை அறிந்துகொள்வது, க்ளைம் நிலை, குறைகளைப் பதிவு செய்வது, நிதிப் பரிமாற்றம் போன்ற சேவைகளை ஆன்லைனில் கொண்டுவந்துள்ளது பி.எஃப். அமைப்பு. இந்தச் சேவை குறித்து சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் கமிஷனர் எஸ்.டி.பிரசாத் விரிவாக விளக்கிச் சொன்னார்.
''பி.எஃப். என்பது ஓய்வுக்கால தேவை களுக்காகத்தான். இன்றையச் சூழ்நிலையில் ஒரே நிறுவனத்தில் ஓய்வுக்காலம் வரை வேலை பார்ப்பது குறைவாகவே உள்ளது. பலரும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும்போதும், ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு வேலை மாறும்போதும் பி.எஃப். கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிடுகிறார்கள். இதனால் அவர்களுடைய ஓய்வுக்காலத்திற்கான தொகை போதிய அளவுக்கு கிடைப்பதில்லை.
ஒருவர் குறைந்தபட்சம் 10 ஆண்டு காலம் பி.எஃப். கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தியிருந்தால் மட்டுமே பென்ஷன் கிடைக்கும். அத்துடன் பணிக் காலத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டு அதனால் உடலில் நிரந்தர ஊனம் ஏற்பட்டாலும் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டாலும் அவரது குடும்பத்திற்கு பென்ஷன் கிடைக்கும்.
பி.எஃப்.-ன் அவசியம் என்ன என்பது குறித்த விழிப்பு உணர்வு இல்லாததாலும், கணக்கிலிருந்து பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்க முடியும் என்பதாலும் பலரும் பி.எஃப். கணக்கில் உள்ள பணத்தை எளிதாக எடுக்கிறார்கள்.
இன்னும் சிலர் ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு வேலை மாறும்போது அதுவரை சேர்த்த பணத்தை மாற்றாமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள். இதுமாதிரியான பல பிரச்னைகளுக்கு தீர்வுதான் ஆன்லைன் பரிவர்த்தனை'' என்றவர், இதன்மூலம் கிடைக்கும் புதிய வசதிகள் பற்றியும் எடுத்துச் சொன்னார்.
''பி.எஃப். இணையதளத்தில் ஏற்கெனவே க்ளைம் நிலை, பேலன்ஸ் தொகை பார்க்கும் வசதி, இ-பாஸ்புக் என பல வசதிகள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் க்ளைம் வருவதுதான் எங்களுடைய மிகப் பெரிய சிக்கலாக இருந்தது. மேலும், ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு பணத்தை மாற்றும்போது எந்த படிவத்தை எதற்கு பூர்த்தி செய்து தரவேண்டும் என்ற விவரம் பலருக்கும் சரியாகத் தெரியாததால் இதுபோன்ற சிக்கல்கள் இருந்து வந்தன. இதற்கு தீர்வாக ஒரு கணக்கிலிருக்கும் தொகையை இன்னொரு கணக்கிற்கு எளிதாக இனி மாற்றிக்கொள்ளும் வசதியை ஆன்லைனில் கொண்டு வந்திருக்கிறோம்.
ஓர் அலுவலகத்திலிருந்து இன்னொரு அலுவலகத்திற்கு பி.எஃப். கணக்கை மாற்ற படிவம் 13-ஐ பூர்த்தி செய்து தரவேண்டும். (இந்த விண்ணப்பம் பெற http://www. epfindia.gov.in/WhichClaim.html-க்கு செல்லுங்கள்!) ஆன்லைன் சேவையைப் பெற செல்போன் எண் மற்றும் அரசு வழங்கிய பான் கார்டு, பாஸ்போர்ட், ஒட்டுநர் உரிமம், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை என 14 வகையான சான்றுகளில் ஏதாவது ஒன்றை தந்து பதிவு செய்யலாம்.
இதில் செல்போன் எண்தான் மிக முக்கியம். ஓர் எண்ணுக்கு ஒரு ஐ.டி.யைதான் உருவாக்க முடியும். ஒரு உறுப்பினர் அதிகபட்சமாக 10 பி.எஃப். கணக்கைப் பார்க்க முடியும். அதாவது, வெவ்வேறு நிறுவனத்தில் வேலை பார்த்து அங்குள்ள கணக்குகளின் நிலையைப் பார்க்க முடியும். பல கணக்குகளை வைத்திருப்பவர்கள் அதை ஒரே கணக்கு எண்ணிற்கு மாற்றம் செய்துகொள்வது நல்லது.
இந்தப் புதிய வசதியின் மூலமாக ஒருவர் மார்ச் 2013 வரையிலான வட்டியுடன் கூடிய தொகையைப் பார்க்க முடியும். ஏப்ரல் 2013-க்கு பிறகு வட்டி சேராத பி.எஃப். தொகை மட்டும் வரவு வைக்கப்பட்டிருக்கும். மேலும், செயல்பாட்டில் இல்லாத கணக்கு குறித்த தகவல்களைக் கேட்பவர்களுக்கு மட்டும்தான் தருகிறோம். உறுப்பினர் தவிர வேறு யாரும் இந்த சேவையைப் பெற முடியாது'' என்றவர், நிறுவனங்களுக்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள வசதிகள் குறித்தும் விளக்கினார்.
''நிறுவனத்தின் இயக்குநர்கள் தங்கள் கையெழுத்தை டிஜிட்டல் கையெழுத்தாக பதிவு செய்வது அவசியம். ஏனெனில், இனி ஆன்லைனில் பூர்த்தி செய்யப்படும் படிவத்தை டிஜிட்டல் கையெழுத்திட்டு அனுப்பினால் செட்டில்மென்ட் விரைவாக நடக்கும்'' என்று முடித்தார்.
இதுநாள்வரை பி.எஃப். விஷயத்தில் பலரும் அனுபவித்த சிக்கல்கள் இனி இருக்காது என்பது நல்ல விஷயம்தானே!
Ungal sevai innum valara vazhtukal -
ReplyDeleteipadiku annanin viludhugal