இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எவருக்கும் என் வாக்கு இல்லை என்று சொல்ல வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது. இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த நல்ல நிர்வாகத்தின் திறவுகோலாக இது இருக்கும். உலகின் 13 நாடுகளில் இந்த முறை உள்ளது. நாடாளுமன்ற வாக்கெடுப்புகளில்கூட யாருக்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை என்ற ஓட்டுரிமை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும்போது வாக்காளர்களுக்கும் அந்த உரிமையை வழங்க வேண்டும்!’ -
49ஓ என்று பரவலாக அறியப்படும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை அதிகாரபூர்வமாக அமல்படுத்தி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த பி.யூ.சி.எல். அமைப்பின் தமிழகப் பொறுப்பாளர், வழக்கறிஞர் சுரேஷிடம் பேசியபோது...
''இந்த வழக்கை 2004-ல் நாங்கள் தாக்கல் செய்தபோது பி.ஜே.பி., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே எதிர்த்தன. மிகச் சிறந்த வாதத்தின் மூலம் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். அமெரிக்கா தொடங்கி நமது அண்டை நாடான பங்களாதேஷ் வரை 13 நாடுகளில், 'யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை’ என்பதைப் பதிவுசெய்யும் நடைமுறை உள்ளது. வாக்களிக்கும் உரிமை எப்படி ரகசியமாக உள்ளதோ, அதேபோல வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற நடைமுறையும் ரகசியமாக இருக்க வேண்டும் எனக் கோரினோம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் கமிஷன் எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டாலும், இப்போதுதான் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இது கள்ள ஓட்டுப் போடுவோருக்குக் கொண்டாட்டமாகவும், ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஆதாயமாகவும் இருக்கும் நிலையில் இந்த நடைமுறை மிகப் பெரிய ஜனநாயகத் தேர்தல் சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் என்று நம்புகிறோம்!'' என்கிறார் சுரேஷ்.
'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டுவருவதை எல்லா அரசியல் கட்சிகளும் எதிர்ப்பது போல, 'எவருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை’ என்பதைச் சொல்லும் 49ஓ-வையும் அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கின்றன. இரண்டையும் எதிர்க்க ஒரே காரணம், ஆள் பலமும் அடியாள் பலமும் உள்ளவர்களை வைத்து அனைத்துக் கட்சிகளும் அரசியல் செய்யும் நடைமுறைதான். பொதுவாழ்வில் தூய்மை பேணும் பெரியவர் நல்லக்கண்ணு இந்த உரிமை பற்றி என்ன சொல்கிறார்...
''தேர்தல் என்பது ஒரு ஜனநாயகம். குற்றப் பின்னணி உள்ள அரசியல்வாதிகளால் மக்கள் தேர்தல் நடைமுறையில் அதிருப்தியடைந்து கணிசமாக வாக்களிக்க வராமல் இருக்கிறார்கள். இப்படி வாக்களிக்க விரும்பாதவர்களையும் வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வரவேண்டும் என்று இந்த முறையைக் கொண்டுவருகிறார்கள். வாக்காளர்கள் இடையே எழுந்துள்ள அதிருப்தியை இந்த நடைமுறை சரிசெய்யும் என்று நம்புகிறார்கள். ஆனால், வாக்குச்சாவடிக்கு வந்து யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று தெரிவிப்பதும், வாக்களிக்கச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதும் ஒன்றுதான் என்று வாக்காளன் நினைத்தால் என்ன செய்வது? ஆக, இந்த நடைமுறையே அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு என்று நினைப்பது சரியல்ல!'' என்கிறார் நல்லக்கண்ணு.
''உச்ச நீதிமன்ற உத்தரவு எப்போது நடைமுறைக்கு வரும்?'' என்று தேர்தல் ஆணையர் பிரவீன்குமாரிடம் கேட்டேன்.
''இது வரவேற்கவேண்டிய விஷயம். மத்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பித்தவுடன் அமல்படுத்திவிடுவோம். வாய்ப்பு இருந்தால் வர இருக்கும் ஏற்காடு இடைத்தேர்தலில்கூட இதனை அறிமுகப்படுத்துவோம்'' என்றார் தேர்தல் ஆணையர்.
ஓஹோ..!
No comments:
Post a Comment